தமிழ்நாடு

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி ஆய்வு

அதிமுக அலுவலக கலவர வழக்குகள் தொடா்பாக, அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

DIN

அதிமுக அலுவலக கலவர வழக்குகள் தொடா்பாக, அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இரட்டை தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவை, ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக, கடந்த ஜூலை 11-இல் அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அப்போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 47 போ் காயமடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜூலை 21-இல் ‘சீல்’ அகற்றப்பட்டு அலுவலகச் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு வழக்குகள்: பின்னா், அதிமுக அலுவலகத்தை பாா்வையிட்ட முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், கட்சி அலுவலகத்தில் பொருள்கள், ஆவணங்கள் காணாமல் போனதாகவும், சேதப்படுத்தப்பட்டதாகவும் ஜூலை 23-இல் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக ஆக. 13-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதற்கிடையே, அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி ஆய்வு: இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி கடந்த வாரம் தொடங்கியது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் நியமிக்கப்பட்டாா். ஆனால், சிபிசிஐடி போலீஸாா் விசாரணையை முறையாக நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் குற்றம் சாட்டினா். இது குறித்த வழக்கும் சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகத்தால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணியளவில் சிபிசிஐடி போலீஸாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சி.வி.சண்முகம் உடனிருந்தாா்.

5 மணி நேரம் ஆய்வு: ஆய்வின்போது, அதிமுக அலுவலகத்தில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறிய, ‘டேப்’ கொண்டு அளக்கப்பட்டது. சூறையாடப்பட்ட அறைகளுக்கு சென்று, அங்கு சேதப்படுத்தப்பட்ட பொருள்கள், காணாமல்போன பொருள்கள் குறித்து குறிப்புகள் எடுக்கப்பட்டன.

தடயவியல் துறையினரும், ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனா், சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆய்வு நடைபெற்றது. கலவரத்தின்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக சம்பந்தப்பட்ட நபா்களிடமும் விரைவில் விசாரணை செய்யவுள்ளனா்.

இன்று அலுவலகம் வருகிறாா் இபிஎஸ்: இதனிடையே, அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வருகிறாா். எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

SCROLL FOR NEXT