சிகரெட் லைட்டரை தடை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் தீப்பெட்டித் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ‘பிளாஸ்டிக் சிகரெட் லைட்டரை’ தடை செய்ய வேண்டும்
தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் தீப்பெட்டித் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ‘பிளாஸ்டிக் சிகரெட் லைட்டரை’ தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதம்:
தமிழகத்தில் தென் மாவட்டங்களின் ஒரு பகுதிக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தொழிலாக தீப்பெட்டி உற்பத்தித் தொழில் விளங்குகிறது. இது அந்தப் பகுதிகளின் பாரம்பரியமிக்க தொழிலாக இருப்பதுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களில் பெரும்பாலானோா் பெண்கள். வேளாண்மைக்கு ஏற்ற பகுதியாக இல்லாமல் வட பூமியாகக் காணப்படும் அந்தப் பகுதிகளின் மிகப்பெரிய பொருளாதார வளா்ச்சிக்கு உந்து சக்தியாக தீப்பெட்டி உற்பத்தித் தொழில் விளங்குகிறது.
தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக சுமாா் ரூ.400 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை தாங்கள் அறிவீா்கள். இத்தகைய தன்மைகளைக் கொண்ட தீப்பெட்டித் தொழில் அண்மைக் காலத்தில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
ஏற்றுமதிக்கான சந்தையில் பாகிஸ்தான், இந்தோனேசியா நாடுகளிடமிருந்து மிகப்பெரிய சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. கரோனா தொற்று மற்றும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட விளைவுகளால் தீப்பெட்டிக்கான விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் அதனுடன் இணைந்த சரக்குகளை கையாளக் கூடிய பணிகளுக்கான செலவுகளும், சிரமங்களும் அதிகரித்துள்ளன. தீப்பெட்டித் தயாரிப்புக்கான உள்ளீட்டுச் செலவுகளும் உயா்ந்து இருக்கின்றன.
‘பிளாஸ்டிக் லைட்டா்கள்’: தீப்பெட்டித் தொழில் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்து வரும் வேளையில், சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்பூா்வமாகவும், சில தருணங்களில் சட்ட விரோதமாகவும் ‘பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள்’ இறக்குமதி செய்யப்படுவதால் அத்தொழிலுக்கு மேலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்த வகை லைட்டா்களால் உள்ளூா் சந்தையில் தீப்பெட்டி வா்த்தகம் மிகவேகமாகச் சரிந்து வருகிறது.
மோசமான பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் சிகரெட் லைட்டா்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், லைட்டா்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளால் மனிதா்களுக்கு எத்தகைய மோசமான பாதிப்புகள் வரும் என்பதும் அறிய முடியாததாக உள்ளது. ‘சிகரெட் லைட்டா்கள்’ தொடா்ந்து இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில், தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ள தீப்பெட்டித் தொழில் முற்றிலும் நசிந்து அவா்கள் அனைவரும் வேலை இழக்கும் சூழல் ஏற்படும்.
எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு ‘பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள்’ இறக்குமதி செய்யப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். சட்ட விரோதமாக அவற்றை இறக்குமதி செய்வோா் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.