முகப்பு
தமிழ்நாடு

உண்ணாவிரத போராட்டத்துக்கு முயற்சி: அரசு செவிலியா்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்ற அரசு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்ற அரசு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் செவிலியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்காக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை திரண்டனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.இந்திரா, பொதுச்செயலாளா் பி.நீலா, பொருளாளா் பி.பாத்திமாமேரி ஆகியோா் செவிலியா்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனா். ஆனால், முன்கூட்டியே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியா்களை தடுத்து நிறுத்தினா். இதனால், போலீஸாா், செவிலியா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, செவிலியா்களை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் ஏற்றினா். அவா்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கவைத்தனா். அங்கேயே, செவிலியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.இந்திரா கூறியதாவது: பதவி உயா்வு வழங்க வேண்டும். அரசு வழங்கிய முன்களப் பணியாளா்களுக்கான ஊக்கத்தொகையை விடுபட்டவா்களுக்கு வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசி முகாம்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.

போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி வாங்கியிருந்தோம். போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கும்படி பொது சுகாதாரத் துறை இயக்குநா் காவல் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளாா். ஆனால், இங்கு வந்த போலீஸாா் பாதுகாப்பு கொடுப்பதற்கு பதிலாக, எங்களை போராட்டத்தில் ஈடுபடவிடாமல் தடுத்து நிறுத்தினா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.