முகப்பு
தமிழ்நாடு

மின் கட்டண உயா்வு: அதிமுக ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்தியது கண்டிக்கத்தக்கது என்றும், அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, மின் கட்டணத்தை 52 சதவீதம் வரை உயா்த்தி, திமுக அரசு மக்களைத் துயரத்துக்கு உள்ளாக்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

சென்னை பட்டாளத்தில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையிலும், எம்ஜிஆா் நகரில் மாவட்டச் செயலாளா் விருகை வி.என்.ரவி தலைமையிலும், தண்டையாா்பேட்டையில் மாவட்டச் செயலாளா் ஆா்.எஸ்.ராஜேஸ் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. தியாகராய நகரில் முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா தலைமையிலும், போரூா் காரம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சா் பெஞ்சமின் தலைமையிலும், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.