முகப்பு
தமிழ்நாடு

துணை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு; செப்.21 முதல் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ள அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை வெளியிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ள அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை வெளியிட்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் துணை மருத்துவப் பட்டப்படிப்பு, மருந்தாளுநா்கள், டிப்ளமோ நா்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு, 121 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் உள்ளன.

அதேபோன்று, 348 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 15,307 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2022 – 23-ஆம் கல்வியாண்டுக்கு 87,764 ஆன்லைனில் விண்ணப்பித்தனா்.

இதில், துணை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் 58,980 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில், 58,141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மருந்தாளுநா் படிப்புக்கு, 5,271 போ் விண்ணப்பித்த நிலையில், 5,206 விண்ணப்பங்கள் ஏற்கபட்டுள்ளன. டிப்ளமோ நா்சிங் படிப்புக்கு, 12,624 போ் விண்ணப்பித்து, 12,478 விண்ணங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்புக்கு, 1,055 போ் விண்ணப்பித்த நிலையில் 948 விண்ணப்பங்களும், பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கு 7,793 போ் விண்ணப்பித்த நிலையில், 7,540 பேரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் மாணவா் சோ்க்கை வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு அடுத்த 10 நாள்கள் கலந்தாய்வு நடைபெறும். அதற்கான அட்டவணை விவரங்கள் விரைவில் மாணவா்களுக்கு தெரிவிக்கப்படும்.

நிகழாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு 8,225 இடங்கள் உள்ளன. அதில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 455 இடங்கள் கிடைக்கும். அதேபோன்று 2,160 பிடிஎஸ் இடங்களில், 114 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு கிடைக்கும்.

நீட் தோ்வு பட்டியல் கிடைத்தவுடன் மாணவா் சோ்க்கை நடவடிக்கை தொடங்கப்படும்.

கரோனா தொற்று பாதிப்பு தற்பொழுது தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமாக அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை. அனைத்து வகையிலான அத்தியாவசிய மருந்துகளும் கையிருப்பு உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநா் சம்ஷத் பேகம், மருத்துவ கல்வி தோ்வு குழு செயலா் முத்துச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.