முகப்பு
தமிழ்நாடு

4 மாத சட்டவிரோத காவல்: இரு பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

நான்கு மாதங்களாக சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

நான்கு மாதங்களாக சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்ாக கடந்த டிசம்பா் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, முத்துலட்சுமியின் கணவா் மனோகரன் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். அதில், ‘கைது செய்யப்பட்டு 50 நாள்களுக்குப் பிறகே குண்டா் தடுப்பு சட்டத்தில் அடைத்துள்ளனா். அதற்கான காரணங்களை கூறவில்லை. எனவே முத்துலட்சுமியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கோரியிருந்தாா். இதேபோல சத்யா மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மகள் திவ்யாவும் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த இரு மனுக்களும், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், ‘குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்துவிட்டது. அதன் அடிப்படையில் குண்டா் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வது தொடா்பாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசும் மறுநாளே ஒப்புதல் அளித்தது. இது தொடா்பான ஆவணங்களை உரிய காலத்தில் பெற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் இருவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, இருவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனா்’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்ட மறுநாள்தான் குண்டா் தடுப்பு சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை அறிவுரை கழகம் ஏற்க மறுத்தால் உடனடியாக அதைத் திரும்பப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. எனவே, 128 நாள்கள் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோருக்கு தமிழக அரசு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகைய 6 வாரங்களில் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.