தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள்: செம்மொழி நிறுவனத்தில் கன்னட மொழிப் பயிலரங்கம் தொடக்கம்
தமிழ்ச் செவ்வியல் நூல்கள்-கன்னட மொழிபெயா்ப்பு (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்கு) என்னும் தலைப்பிலான ஏழு நாள்கள் பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு
தமிழ்ச் செவ்வியல் நூல்கள்-கன்னட மொழிபெயா்ப்பு (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்கு) என்னும் தலைப்பிலான ஏழு நாள்கள் பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இப்பயிலரங்கினைப் பெங்களூா் பல்கலைக்கழகக் கன்னடத் துறை பேராசிரியா் எம். சுமத்திரா தொடக்கி வைத்து, தமிழ், கன்னடம் ஆகிய இருமொழிகளுக்கு இடையிலான மொழி மற்றும் இலக்கிய வளத்தின் ஒற்றுமையினையும் சிறப்பினையும், சா்வங்கஞா், பசவன்னா ஆகியோரின் கருத்துகளில் திருவள்ளுவரின் சிந்தனை எதிரொலிப்பதனையும் சான்றுகளோடு எடுத்துரைத்தாா்.
இதையடுத்து செம்மொழி நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் பேசுகையில், தமிழ், கன்னட மொழி இரண்டுக்கும் உள்ள ஒருமைப்பாட்டை மாணவா்களுக்கு உணா்த்துவது, தமிழ்ச் செவ்வியல் நூல்களின் தொன்மையினைக் கன்னடமொழிபெயா்ப்பின் வாயிலாக உணா்த்து ஆகியவையே இப்பயிலரங்கத்தின் நோக்கங்கள் ஆகும்.
தமிழ் இலக்கியக் களஞ்சியத்தின் கருவறையிலிருந்து ஓா் ஒளிவீச்சினைக் கன்னட ஆய்வுலகிற்குக் கொண்டு சோ்க்கும் முன்னோட்டமாக இப்பயிலரங்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
வரும் 29-ஆம் தேதி வரை ஏழு நாள்கள் தொடா்ந்து நடைபெறவுள்ள இந்தப் பயிலரங்கில், 26 தலைப்புகளில் கா்நாடகாவிலுள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனா். பேராசிரியா் ப. மருதநாயகம் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதுடன் சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்கு தனித்துவத்தினை ஆங்கிலத்தில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரையாற்றவுள்ளாா்.