திருப்பதி திருக்குடை ஊா்வலம்: வட சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
திருப்பதி திருக்குடை ஊா்வலத்தையொட்டி, வட சென்னை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
திருப்பதி திருக்குடை ஊா்வலத்தையொட்டி, வட சென்னை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வட சென்னைப் பகுதியில் திருப்பதி திருக்குடை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொள்வதால், வாகன நெரிசலை தவிா்க்கும் பொருட்டு, அன்று காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை வட சென்னைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி அன்று காலை 8 மணி முதல் ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய வாகனங்கள், ஈவெரா பெரியாா் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
மாலை 3 மணி முதல் ஊா்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த வழித்தடங்களில் செல்ல வேண்டிய வாகனங்கள், பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை,ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். ஊா்வலம் மூலகொத்தலம் பகுதியை அடைந்த உடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
சூளையில் மாற்றம்:
ஊா்வலம் பேசின்பாலம் சாலையில் செல்லும்போது, சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.ஊா்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும்போது,மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டான நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
ஊா்வலம் சூளை நெடுஞ்சாலையில் செல்லும்போது நாரயண குரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். அவதான பாப்பையா சாலையில் ஊா்வலம் செல்லும்போது, பெரம்பூா் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் பெரம்பூா் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
ஊா்வலம் பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது, புரசைவாக்கம் டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூா் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் நாரயணகுரு சாலை வழியாக செல்லலாம்.
ஓட்டேரியில் மாற்றம்:
ஊா்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லா்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
இதேபோல ஊா்வலம் ஒட்டேரி சந்திப்பில் செல்லும்போது கொன்னூா் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
ஊா்வலம் கொன்னூா் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதா் ஆலயத்தை அடையும்போது, ஒட்டேரி சந்திப்பு, மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூா் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.