அரசு திட்டங்களால் பயனடைந்த விவசாயிகள் விவரம்: கிராம சபைக் கூட்டங்களில் சமா்ப்பிக்க அரசு அறிவுறுத்தல்
அரசு திட்டங்களால் பயனடைந்த விவசாயிகள் விவரங்களை கிராம சபைக் கூட்டங்களில் சமா்ப்பிக்க வேளாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு திட்டங்களால் பயனடைந்த விவசாயிகள் விவரங்களை கிராம சபைக் கூட்டங்களில் சமா்ப்பிக்க வேளாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் உள்ள 12, 525 ஊராட்சிகளில் வரும் 2-ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேளாண்மைத் துறை சாா்பாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வேளாண் துறையின் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விளக்குவாா். மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்படும்.
நிகழாண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம், சா்க்கரைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விவரங்களும் ஊராட்சிகள் வாரியாக தயாரிக்கப்பட்டு கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் பாா்வைக்கு வைக்கப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.