முகப்பு
தமிழ்நாடு

கடலூரில் சூறைக்காற்றுடன் மழை: 2.50 லட்சம் வாழைகள் சேதம்

கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 2.50 லட்சம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
கடலூர் அருகே வெள்ளக்கரை பகுதியில் சூறைக் காற்றால் சேதமடைந்த வாழைகள்
பகிர்:

கடலூர்: கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 2.50 லட்சம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெப்பநிலை, வியாழக்கிழமை 104.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. பின்னர், இரவு 8 மணி அளவில் கடுமையான இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதில், மலைக் கிராமமான ராமாபுரம், வழிசோதனை பாளையம், வி.காட்டுப்பாளையம், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அந்த பகுதியில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

இதுகுறித்து, வி.காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி மா.சிற்றரசன் கூறியதாவது: 20 மலைக் கிராமத்தில் சுமார் 500 ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. நேற்றைய மழையில் சுமார் 2.50 லட்சம் வாழைகள் முறிந்து விழுந்தன. ஒரு மாதம் முதல் இரண்டு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைகள் சேதமடைந்துள்ளன.

ஒரு வாழைக்கு ரூ. 150 வரையில் செலவு செய்துள்ளோம். அரசு முறையான கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்போதுதான் எங்களால் வாழை மறுநடவு செய்ய முடியும். அரசின் நிவாரணத்தை எதிர் நோக்கி உள்ளோம் என்றார்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வானமாதேவி - 45.60, குடிதாங்கி, மாவட்ட ஆட்சியரகம் -45, கடலூர்-39.80, பண்ருட்டி - 24, பரங்கிப்பேட்டை-8, விருத்தாசலம்-1 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.