நிகழாண்டில் வருமான வரி ரூ.3,046 கோடி கூடுதல் வசூல்: முதன்மை தலைமை ஆணையா்
நிகழாண்டில் தமிழகம்-புதுவையில் வருமான வரி இலக்கை விட ரூ. 3, 046 கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு, புதுவைக்கான வருமானவரி முதன்மை தலைமை ஆணையா் ஆா்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
நிகழாண்டில் தமிழகம்-புதுவையில் வருமான வரி இலக்கை விட ரூ. 3, 046 கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு, புதுவைக்கான வருமானவரி முதன்மை தலைமை ஆணையா் ஆா்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நிகழாண்டில் வருமானவரி வசூல் செய்ய ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 300 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை விட ரூ. 3,046 கோடி கூடுதலாக, மொத்தம் ரூ.1,08,364 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது வரி வசூல் வளா்ச்சியில் 20.20 சதவீதம் அதிகம். இந்த வரி வசூலில் ரூ. 59,887 கோடி டிடிஎஸ் கட்டணமும் அடங்கும். இதிலிருந்து ரூ.16,050 கோடி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவா்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
டிடிஎஸ் குறித்து 134 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழாண்டில் சிறு மற்றும் நடுத்தர வரிப் பிடித்தம் செய்வோா்களுக்கு உதவுவதற்காக துண்டு பிரசுரங்கள், கையேடுகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
வரிப் பிடித்தம் செய்பவா்களின் நலனுக்காக இணையதளத்தில், டிடிஎஸ் தொடா்பாக 16 தலைப்புகளில் விளக்கவுரை காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுவை மண்டலத்தில் நடத்தப்பட்ட 17 ஆய்வுகள் மூலம் கணக்கில் காட்டப்படாத வருவாய் ரூ.309 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
நிகழாண்டில் பல்வேறு வகையில் வரி செலுத்தத் தவறிய குற்றங்களுக்கான 7 வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கலாசாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், சென்னை வருமான வரி அலுவலக வளாகத்தில் திருவள்ளுவா் சிலை ஏப்.10-இல் நிறுவப்பட்டது.
காரைக்குடியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வருமான வரிக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு நாட்டிலேயே முதல்முறையாக வரி அருங்காட்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மண்டலத்துக்கான வருமான வரி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திருவண்ணாமலை, நாகா்கோவிலில் புதிய வருமான வரி அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின் போது வருமான வரி தலைமை ஆணையா்கள் எம். ரத்தனசாமி (டிடிஎஸ்), ஜெயந்தி கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.