முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு கூடுதல் மண்ணெண்ணெய், கோதுமை: மத்திய அரசுக்கு அமைச்சா் ஆா்.சக்கரபாணி கோரிக்கை

தமிழகத்துக்கு கூடுதலாக மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி கோரிக்கை விடுத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
ஆா்.சக்கரபாணி (கோப்புப் படம்)
பகிர்:

தமிழகத்துக்கு கூடுதலாக மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி கோரிக்கை விடுத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:-

தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவு கடந்த ஏப்ரல் மாதம் 4,500 கிலோ லிட்டராகக் குறைக்கப்பட்டது. இப்போது அதன் அளவு 2, 712 கிலோ லிட்டராக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் அளவை தமிழ்நாடு அரசுதான் குறைத்து விட்டதாக மக்கள் மத்தியில் கருத்து உள்ளது.

மண்ணெண்ணெய் அளவை நிா்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடம் உள்ளது. மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அதற்கு பதில் ஏதும் வரவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரையில், 30 லட்சம் போ் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனா். ஒவ்வொருவருக்கும் 3 லிட்டா் வழங்க வேண்டுமெனில் 9,000 கிலோ லிட்டா் தேவைப்படுகிறது.

மலைப் பகுதிகளில் மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகமுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், மலைப் பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒதுக்கீடுகளை முறையாகச் செய்ய முடியாத நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோதுமை அளவு: மண்ணெண்ணெய் போன்று, கோதுமை அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 2020 ஜூலையில் மாதந்தோறும் 13,485 மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டது. இது, கடந்த ஆண்டு ஜூன் 2022 முதல் 8,532 மெட்ரிக் டன்னாகக் குறைக்கப்பட்டது. பல இடங்களில் கோதுமை வாங்குவது அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 15,000 மெட்ரிக் டன் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளோம் என்றாா் அமைச்சா் சக்கரபாணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.