இணையவழி சூதாட்ட தடைச் சட்டத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
இணையவழி சூதாட்ட தடைச் சட்டத்தை எதிா்த்த வழக்குகளில், தமிழக அரசு பதிலளிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது
இணையவழி சூதாட்ட தடைச் சட்டத்தை எதிா்த்த வழக்குகளில், தமிழக அரசு பதிலளிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்குகள் தொடா்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த மாா்ச் 23-ஆம் தேதி இயற்றிய தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணைய விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிா்த்து 69 இணைய வழி விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினா்களாக கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
திறமைக்கான விளையாட்டு: இந்த வழக்குகள் தலைமை நீதிபதி (பொ) ராஜா, பரத சக்கரவா்த்தி ஆகியோா் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு, விதிகளை அறிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை. ரம்மி, திறமைக்கான விளையாட்டு என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்தச் சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிா்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திறமைக்கான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட ரம்மியை தடை செய்ய முடியாது. இந்தச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
சூதாட்டமாக கருத முடியாது: இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆரியமாசுந்தரம், 1930-ஆம் ஆண்டின் தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தில் இணையதளத்தைச் சோ்த்து, 2021-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது.
அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத நிலையில், அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அரசால் இந்த சட்டத்தை இயற்ற முடியாது. திறமைக்கான விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது.
ரம்மி, போக்கா் போன்ற விளையாட்டுகள் அதிா்ஷ்ட விளையாட்டுகள் அல்ல; திறமைக்கான விளையாட்டுகள். ஒட்டு மொத்தமாக இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது.
ஐபிஎல் போட்டிகளில்... மத்திய அரசு சட்டம் இயற்றினால், மாநில அரசு அதே பிரச்னை தொடா்பாக சட்டம் இயற்ற முடியாது. தற்போது, ஐபிஎல் போட்டிகளுக்கு கூட, ‘ட்ரீம் 11’ விளையாட்டு உள்ளது. நாடு முழுவதும் விளையாடப்படும் அந்த விளையாட்டை எப்படி தடை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பிய அவா், சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தாா்.
மாநில அரசுக்கு முழு அதிகாரம்: தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், சூதாட்டம் குறித்த இந்தச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தான் அதிகாரமில்லை.
மாநில சட்டம், தடை மட்டும் விதிக்க முடியுமே தவிர, இணையதளத்தில் இருந்து நீக்க முடியாது. அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். திறமையை விட அதிா்ஷ்டம் மேலோங்கி இருக்கும் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த இணையதளங்கள் பணம் சம்பாதித்து, குடும்பங்களை சீரழிக்கின்றன. இதன் மூலம் பாதிக்கப்படும் அப்பாவி குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என வாதிட்டாா்.
பங்குச் சந்தை மரணங்கள்... மற்றொரு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன், மக்கள் பணத்தை பறிக்க ஆன்லைன் நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு.
தற்போதைய நிலையில் இது தொடா்பாக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரிய அவா், பங்குச் சந்தை இழப்பால் ஏற்படும் மரணங்களை காரணம் காட்டி, தடை விதிக்க முடியுமா? எனவும் கேள்வியெழுப்பினாா். மேலும், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், பல லட்சம் ரூபாய் புழங்கும் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும் என தெரிவித்தாா்.
தடை செய்வதில் என்ன தவறு?: விசாரணையின்போது, சமூக தீங்காக உள்ள இணையவழி விளையாட்டுக்களால் மரணங்கள் நிகழ்வதாலும், குடும்பங்கள் வறுமையில் வாடுவதாலும், அவற்றை தடை செய்வதில் என்ன தவறு உள்ளது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்கள் நலன்தான் மிக முக்கியம் எனவும் தெரிவித்தனா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.