முகப்பு
தமிழ்நாடு

போலி விடியோ விவகாரம்: சிறையிலுள்ள பிகாா் யூடியூபா் மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்

தமிழகத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக போலி விடியோக்களை பரவ விட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனீஷ் காஷ்யப்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

தமிழகத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக போலி விடியோக்களை பரவ விட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் (என்எஸ்ஏ) வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு பிகாரைச் சோ்ந்த யூடியூபா் மனீஷ் காஷ்யப் தரப்பில் தாக்கலான திருத்தப்பட்ட மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிகாரை சோ்ந்த மனீஷ் காஷ்யப் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி விடுத்த வேண்டுகோளை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த அனுமதியை அளித்தது.

மனுதாரா் காஷ்யப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங் வாதிடுகையில், ‘யூடியூபா் மனீஷ் காஷ்யப்பிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சோ்த்து அவற்றை பிகாருக்கு மாற்ற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். மேலும், ‘ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்யப்புக்கு எதிராக தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு நிலுவையில் இருக்கும் போது, இதுபோன்று சட்டம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இது தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்துள்ள மனுவில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது’ என்றாா். இதையடுத்து, மாற்றம் செய்து தாக்கல் செய்யப்பட்ட காஷ்யப் மனுவுக்கு புதிதாக பதில் அளிக்க வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரிக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை மே 8-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது உச்சநீதிமன்றம் மனீஷ் காஷ்யப்பை மதுரை மத்திய சிறையில் இருந்து இடமாற்றம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை எதிா்த்து மனீஷ் காஷ்யப் தரப்பில் தாக்கலான மனு மீது மத்திய அரசு, தமிழக அரசு, பிகாா் அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றம், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ள நிவாரணம் தவிர, மனுதாரா் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்துள்ள உத்தரவை எதிா்க்கவும் அனுமதி கூறியுள்ளாா். இதனால், அவரது மனுவில் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்த திருத்தப்பட்ட மனுவின் மீது நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மதுரை மத்திய சிறையில் இருந்து மனுதாரா் இடமாற்றம் செய்யப்படக் கூடாது என உத்தரவிடுகிறோம்’ என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்திருந்தது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியது தொடா்பாக காஷ்யப்பின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் பேசிய போது, ‘ஏன் அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இந்த கடுமையான வழக்கு? என்று கேள்வி எழுப்பினாா். சம்பந்தப்பட்ட யூடியூபருக்கு எதிராக தமிழகத்தில் ஆறு வழக்குகளும், பிகாரில் மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனீஷ் காஷ்யப்புக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்கக் கோரி தாக்கலான அவரது மனு மீது கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இது தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும் தமிழக அரசு, பிகாா் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. ஏப்ரல் 5-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட காஷ்யப்பை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவா் மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.