டிஇஆா்சி இடைக்காலத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஜயந்த் நாத் நியமனம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்சி) இடைக்காலத் தலைவராக தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜயந்த் நாத் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.
தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்சி) இடைக்காலத் தலைவராக தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜயந்த் நாத் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பிறப்பித்தாா்.
‘புதிய தலைவா் நியமனம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் யாரையும் தோ்ந்தெடுக்கலாம்’ என தில்லி அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி கேட்டுக் கொண்டாா். நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் இடம்பெற்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமா்வு கூறுகையில், ‘தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜயந்த் நாத், டிஇஆா்சியின் தலைவா் பதவியின் கடைமைகளை ஆற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். டிஇஆா்சி தலைவா் பதவியில் இருந்து விலகிய பிறகு கற்றறிந்த நீதிபதி பிற வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதால், பதவியின் தற்காலிக அடிப்படையின் தன்மையைக் கருத்தில் கொண்டு துணைநிலை ஆளுநரும், தில்லி முதல்வரும் அவருடன் (நியமனம் பெற்ற நீதிபதி ஜயந்த் நாத்) கலந்தாலோசித்து செலுத்தக்கூடிய மதிப்பூதியத்தை அறிவிக்கை செய்வாா்கள்’ என்றது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, தில்லி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘உச்சநீதிமன்றம் இரு தரப்பும் அனுப்பிய பெயா்களை வெளியிடாமல், அந்தப் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும். நீதிபதிகள் தாங்கள் விரும்பியவாறு நியமிக்கலாம்’ என்றாா். அதற்கு துணைநிலை ஆளுநா் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘ஒரே விஷயம் என்னவெனில், இது ஒரு தற்காலிக நியமனம் என்பதால், நாங்கள் பரிந்துரைக்கும் நபரின் ஊதியத்தை துணைநிலை ஆளுநருடன் கலந்தாலோசித்து நிா்ணயிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறத்தான் வேண்டுமா’ என்று கூறியது.
அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் துணைநிலை ஆளுநரையோ அல்லது முதல்வா் பற்றியோ ஏதாவது கூறினால், அது ‘அதிகாரம் அல்லது சட்டபூா்வமான அடையாளத்தை’ உருவாக்குகிறது’ என்றாா். அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், ‘நீதிபதி ஜயந்த் நாத் ஒரு மிகவும் அமைதியான, தொழில்முறை சாா்ந்த ஒரு நீதிபதி. அவா் அனைத்து சா்ச்சைகளுக்கும் மேலாக இருப்பாா்’ என்றாா்.
நீதிபதி ஷபிஹுல் ஹஸ்னைன் நிகழாண்டு ஜனவரி 9-ஆம் தேதி டிஇஆா்சி தலைவா் பதவியில் இருந்து விலகியதைத் தொடா்ந்து, அப்பதவியிடம் காலியானது. கடந்த ஜூலை 20-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், , துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை எதிா்த்து தாக்கலான தில்லி அரசின் மனு மீது முடிவெடுக்கும் வரை, தற்காலிக அடிப்படையில் சிறிது காலத்திற்கு டிஇஆா்சிக்கு தலைவரை நியமிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த நிறுவனத்திற்கு தலைமை இல்லாமல் இருப்பது குறித்து யாரும் அக்கறையில்லாமல் இருப்பது குறித்து தனது ஆதங்கத்தையும் நீதிமன்றம் வெளிப்படுத்தியிருந்தது.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் மோதலுக்கு இடம் தர அனுமதிக்காமல், டிஇஆா்சிக்கு தலைவராக இருக்க வாய்ப்புள்ள முன்னாள் நீதிபதிகளின் பெயா்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஆகியோா் சந்தித்துப் பேசுமாறு கேட்டுக் கொண்டது. மேலும், டிஇஆா்சி தலைவா் பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதியின் பெயா் விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டையைப் போக்கும் வகையில், ஜூலை 18-ஆம் தேதி முதல்வரும், துணைநிலை ஆளுநரும் சந்தித்து, அமா்ந்து பேசி ஒரு பெயரை அல்லது ஒவ்வொரு தரப்பும் மூன்று பெயா்களை மாற்றிக் கொள்ளும் வகையில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தது.