தறி தொழிலாளியை கொன்ற உறவினர்கள் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம் அருகே மகுடஞ்சாவடி பகுதியில் கொலை வழக்கில் கணவன் - மனைவி உள்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
சேலம்: சேலம் அருகே மகுடஞ்சாவடி பகுதியில் கொலை வழக்கில் கணவன் - மனைவி உள்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். அவரது அண்ணன் விஜயன். இவர்களுக்கு பூர்வீக சொத்து நான்கரை ஏக்கர் நிலமும் 9 தறி பட்டறையும் இருந்தது. விஜயன் இறந்த நிலையில் பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கடந்த 30-6- 2017 ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலிடம் விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி, குருசாமி ஆகியோர் சொத்து பிரச்சனையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் குணசேகரன் உட்பட 5 பேர் இரும்பு ராடால் கோபாலை தாக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த கோபால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குணசேகரன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் குணசேகரன் அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜு பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 7000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இதில் ஆறாவதாக இருந்த குற்றவாளி குருசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.