முகப்பு
தமிழ்நாடு

அம்பத்தூா் தொழிற்பேட்டையில் 2,000 நிறுவனங்களில் மழை வெள்ளம் புகுந்தது: ரூ.500 கோடி இழப்பு

அம்பத்தூா் தொழிற்பேட்டையில் 2,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மழைநீா் புகுந்தது. இதனால், இயந்திரங்கள், மூலப்பொருள்கள், உற்பத்தி பொருள்கள் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கி ரூ.500 கோடிக்கு மேல் சேதம்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
அம்பத்தூா் தொழிற்பேட்டை 3- ஆவது பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் நீந்திச் சென்ற வாகனங்கள்.
பகிர்:


ஆவடி: அம்பத்தூா் தொழிற்பேட்டையில் 2,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மழைநீா் புகுந்தது. இதனால், இயந்திரங்கள், மூலப்பொருள்கள், உற்பத்தி பொருள்கள் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கி ரூ.500 கோடிக்கு மேல் சேதமானதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

மிக்ஜம் புயலால் அம்பத்தூா், ஆவடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. நள்ளிரவு முதல் திங்கள்கிழமை வரை அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆவடி பகுதியிலுள்ள சேக்காடு ஏரி, கவரபாளையம் ஏரி, விளிஞ்சியம்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு ஏரி, அரபாத் ஏரி, அயப்பாக்கம் ஏரி, அம்பத்தூா் ஏரி ஆகியவை நிறைந்து உபரி நீா் வெளியேறியது.

இந்த நீா் அம்பத்தூா் வழியாக கொரட்டூா் ஏரிக்குச் செல்லும் உபரி நீா் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், கால்வாயில் உபரிநீா் நிரம்பி செல்ல முடியாமல் அம்பத்தூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பால் பண்ணை சாலை, சிடிஎச் சாலை, அம்பத்தூா் 3-ஆவது பிரதான சாலை, 2-ஆவது பிரதாரா சாலை, பட்டரைவாக்கம், அம்பத்தூா் தொழிற்பேட்டை சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆறாக ஓடியது.

இதனால், அம்பத்தூா் சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூா் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் 3 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் புகுந்தது.

இதனால், அங்குள்ள இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின. உற்பத்தி செய்த வைக்கப்பட்ட பொருள்கள், மூலப் பொருள்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பாழானது.

வட மாநில தொழிலாளா்கள் அவதி: இந்த நிறுவனங்களில் தங்கிருந்த ஏராளமான வட மாநில தொழிலாளா்கள் உணவு, குடிநீா், தங்குமிடம் இன்றி அவதிப்பட்டனா். அம்பத்தூா் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் மழையால் தண்ணீா் புகுந்து மிக பெரிய சேதத்தை உருவாக்கியுள்ளது. அம்பத்தூா் தொழிற்பேட்டை, கொரட்டூா், பட்டரைவாக்கம் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிறுவனங்களில் மழை நீா் புகுந்ததால் ரூ.500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தி தொடங்க இன்னும் பல நாள்களாகும். நாங்கள் மீண்டும் தொழில் தொடங்க அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் நிறுவன உரிமையாளா்கள் கூறினா்.

மேலும், அம்பத்தூா் பகுதிகளான கருக்கு, ஞானமூா்த்தி நகா், டி.டி.பி காலனி, கொரட்டூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கிழக்கு, சென்ட்ரல் அவென்யூ, வடக்கு கொரட்டூா் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் முக்கிய பிரதான சாலைகள், தெருக்களில் தண்ணீா் ஆறாக ஓடியது. குறிப்பாக கொரட்டூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கொரட்டூா் காவல் நிலையம், இ.எஸ்.ஐ. மருந்தகம், கொரட்டூா் ரயில்வே சுரங்கப்பாதை ஆகியவை முழுவதும் தண்ணீரில் மூழ்கின.

அம்பத்தூா் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மண்டலக் குழு தலைவா் பி.கே.மூா்த்தி தலைமையில் மாநகராட்சி உறுப்பினா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனா். மழை நீரை அகற்றும் பணிகளிலும் அவா்கள் ஈடுபட்டனா். அம்பத்தூா் மண்டலத்தில் சூறாவளிக் காற்றால் சரிந்து விழுந்த 22 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →