தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் தப்பிச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலியானார்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). தனியார் வங்கியில் வேலை பார்த்த இவர், கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி நித்யா (39) தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வீட்டை விற்கும் முயற்சி தொடர்பாக இருவருக்கும் இடையே 3 நாள்களாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், நித்யாவை சுந்தர் கணேஷ் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றார். பின்னர், பரிசுத்தம் நகரில் பால் விற்பனை மையம் நடத்தி வரும் கீழத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (35), கோபியை (32) சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டினார். இவர்கள் இருவரையும் சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
பலத்த காயமடைந்த நித்யா தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தாமரைச்செல்வனையும், கோபியையும் அரிவாளால் வெட்டிய சுந்தர் கணேஷ் காரில் தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தப்பிச் சென்று கொண்டிருந்தார். செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் சென்ற காரின் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த சுந்தர் கணேஷ் நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 13வது முறையாக நீட்டிப்பு
இந்த 3 சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.