வைகை அணை நீர்மட்டம் உயர்வு: முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு
வைகை அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக,முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் திறப்பு வெளியேற்றம் புதன்கிழமை குறைக்கப்பட்டது.
கம்பம்: வைகை அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக,முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் திறப்பு வெளியேற்றம் புதன்கிழமை குறைக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 139.25 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 6,937 மில்லியன் கன அடியாகவும் நீர் வரத்து விநாடிக்கு 2,517 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 105 கன அடியாகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,500 கன அடி திறக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை 105 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.
இதுகுறித்து தமிழக பொறியாளர் ஒருவர் கூறும்போது, பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,500 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில்,வைகை அணைக்கு வினாடிக்கு 4,944 கன அடி தண்ணீர் சென்றது. இதோடு மட்டுமல்லாமல் இணையாறுகளில் இருந்தும் தண்ணீர் வைகை அணைக்கு கூடுதலாக சென்றதால் அணையின் நீர்மட்டம் 69.70 ஆக உயர்ந்தது, அணையின் மொத்த உயரம் 71 அடியை எட்டிவிடும் என்பதால் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. கால்நடை மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றார்.