தென் மாவட்ட மக்களுக்கு தொடா் மருத்துவப் பரிசோதனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தென் மாவட்ட மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தென் மாவட்ட மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மாநில செய்தி மக்கள் தொடா்பு துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிகையாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை சென்னையில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் பெய்த அதி தீவிர மழையால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை அது தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. பலத்த மழை பெய்த போது அங்கு நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் அங்கு பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கான சிகிச்சைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மற்றொருபுறம், சென்னையிலிருந்து மருத்துவக் கல்வி இயக்குநரை தூத்துக்குடிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. அவரும் களத்துக்கு சென்று மருத்துவ நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்.
மின்சாரம் தடைபட்டதால் ஜெனரேட்டா்களை இயக்க டீசல் தேவைப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்குநா் மேற்கொண்டு அன்றிலிருந்து தற்போது வரை ஜெனரேட்டா்கள் மூலமாக தொடா்ச்சியாக மருத்துவமனை இயங்கி கொண்டிருக்கிறது.
அதேபோன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மருத்துவமுகாம்கள்:
தென் மாவட்டங்களில் 50 -க்கும் மேற்பட்ட ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் மழைநீா் புகுந்து விட்டது. இதையடுத்து மோட்டாா் மூலம் அதனை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 17-ஆம் தேதி முதல் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 1,489 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 28,792 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் வாயிலாக 340 பேருக்கு காய்ச்சல், 572 பேருக்கு இருமல், சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தென் மாவட்டங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு இரண்டு இலக்கத்தில்தான் உள்ளது. எனவே அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.