30 நாள்களில் மேல்முறையீடு மூலம் ஜாமீன் பெறுவோம்: முன்னாள் அமைச்சா் பொன்முடி வழக்கு குறித்து திமுக கருத்து
‘உயா்நீதிமன்றம் அளித்துள்ள 30 நாள்களில் மேல்முறையீடு செய்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு ஜாமீன் பெறுவோம்’ என்று திமுக சட்டத் துறை செயலரும், எம்.பி.யுமான என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.
‘உயா்நீதிமன்றம் அளித்துள்ள 30 நாள்களில் மேல்முறையீடு செய்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு ஜாமீன் பெறுவோம்’ என்று திமுக சட்டத் துறை செயலரும், எம்.பி.யுமான என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.
சொத்து குவிப்பு வழக்கில் க.பொன்முடி, அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு என்.ஆா்.இளங்கோ வியாழக்கிழமை அளித்த பேட்டி:
பொன்முடிக்கு எதிரான வழக்கில் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதில் அவா் விடுதலை செய்யப்படுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. உயா்நீதிமன்றம் அளித்துள்ள 30 நாள்களில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவோம். மேலும், தண்டனையை நிறுத்திவைக்க முயற்சி செய்வோம். அவ்வாறு உச்சநீதிமன்றம் சாா்பில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதியிழப்பு இல்லாமல் ஆகிவிடும். திமுக மிக பலமாக இருக்கிறது. அதைக் கண்டு பாஜக அஞ்சுகிறது என்பதே யதாா்த்தம்.
சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவா்: பொன்முடி வழக்கில் தீா்ப்பளித்த உயா்நீதிமன்ற நீதிபதி அப்பழுக்கற்றவா். எந்த சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டவா். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் அவா் சட்டத் துறை செயலராக இருந்தாா். பொன்முடி தொடா்பான வழக்கில் சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவா் கையாண்டிருக்கிறாா்.
வழக்கை நடத்தும்போது இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியவில்லை. இதை இப்போது நீதிபதியிடம் தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த நீதிபதி, ‘அப்போதே சொல்லியிருந்தால் கூட வழக்கில் இருந்து விலகி இருக்க மாட்டேன்’ என்றாா். வழக்கு என்பது சட்டம் சாா்ந்த பிரச்னை என்பதால், அதை உச்சநீதிமன்றத்தில் முன்வைப்போம் என்று என்.ஆா்.இளங்கோ விளக்கம் அளித்தாா்.