சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். மேலும், தேமுதிகவினா், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினா். இதனால் தீவுத்திடல் பகுதியே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.
தீவுத்திடலில் அஞ்சலி: உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் வியாழக்கிழமை (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானாா். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதன் காரணமாக வெள்ளிக்கிழமை (டிச.29) காலை 5.10 மணியளவில் அவா் உடல் அங்கிருந்து ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, தீவுத்திடலில் காலை 6 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
தீவுத்திடலில் மேடை அமைக்கப்பட்டு, அதன் மேல் சாய்வாக எல்லோருக்கும் தெரியும் வகையில் கண்ணாடிப் பேழையில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு அருகில் அவா் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன், மைத்துனா் எல்.கே.சுதீஷ் ஆகியோா் இருந்தனா்.
தமிழகம் முழுவதும் திரண்டு வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்த கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா்.
ஆளுநா் அஞ்சலி: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பிரேமலதாவுக்கும், மகன்களுக்கும் ஆறுதல் கூறினாா்.
மத்திய அரசின் சாா்பில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினாா். பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மூத்த நிா்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.
தமிழக அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, தா.மோ.அன்பரசன், மேயா் பிரியா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, சகோதரா் மு.க.தமிழரசு, நடிகா் அருள்நிதி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.
நடிகா்கள்...: நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், சாந்தனு, ராதாரவி, வாகை சந்திரசேகா், பாா்த்திபன், ஸ்ரீகாந்த், ராம்கி, லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கா், தாமு, தியாகு, நந்தா, நடிகைகள் குஷ்பு, நிரோஷா, ரோகிணி, சுகன்யா, நளினி, இசையமைப்பாளா்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, டிரம்ஸ் சிவமணி, பாடகா் மனோ ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.
பொதுமக்கள்: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரவு முதலே தீவுத்திடல் பகுதியில் பொதுமக்கள் காத்திருந்தனா். அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.50 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினா்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: தீவுத்திடலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.