தமிழ்நாடு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு  கூடுதலாக ரூ. 1000 கோடி நிவாரண உதவி: மார்க்சிஸ்ட் வரவேற்பு!

DIN


 
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு வழங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள்  வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இதனை வரவேற்கிறது என மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள் தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகின. அனைத்தையும் இழந்து மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். 

தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பேருதவியாக அமைந்தன. ஒன்றிய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் நிவாரண உதவிகளை, உதவித் தொகைகளை மேலும் அதிகரித்திட வாய்ப்புகள் ஏற்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் மறு கட்டமைப்பு பணிகளை சீர் செய்திட ரூ. 21 ஆயிரம் கோடி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒதுக்கிட வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், இதுகாறும் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் சூழலில், கடுமையான பாதிப்புகளை கணக்கில் கொண்டு தற்போது வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடு கட்டவும் - புனரமைக்கவும், பயிர் சேதங்களுக்கும், கால்நடை உயிரிழப்புகளுக்கும், சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் - முனைவோர்கள், சுய உதவிக்குழுக்கள், மீனவர்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், உப்பளங்கள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளும், குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கும், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அரசே மேம்படுத்தி தருவதற்கும் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முற்றுகைப்  போராட்டம்
மத்திய  பாஜக அரசு தமிழகத்தின் மீது கொண்டுள்ள வஞ்சகப் போக்கை கைவிட்டு, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ. 21 ஆயிரம் கோடி நிதியினை உடனடியாக வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2024 ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு நடைபெறும் முற்றுகைப்  போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கே. பாலகிருஷ்ணன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

பாஜக ஆா்ப்பாட்டம்: 103 போ் மீது வழக்குப் பதிவு

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT