மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கோவை ஈஷா யோக மையம் சென்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வருகை தந்தார். அதைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார். பின்னர் மதுரையிலிருந்து விமானம் மூலம் அவர் கோவை வந்தார். கோவை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவருக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகர மேயர் கல்பனா ஆகியோர் வரவேற்றனர். மேலும் குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியும் உடன்இருந்தார்.
தொடர்ந்து கோவை விமான நிலையத்திலிருந்து தமிழக அரக விருந்தினா் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவா் அங்கு சிறிது நேர ஓய்வெடுத்தார். பின்னா் மாலை ஈஷா யோக மையத்துக்குப் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். பின்னா் அங்கிருந்து மீண்டும் கோவை அரசு விருந்தினா் மாளிகைக்கு திரும்பும் அவா் இரவு அங்கேயே தங்குகிறாா். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவை மாநகரிலும், கோவையிலிருந்து தொண்டாமுத்தூா் வழியாக ஈஷா யோக மையத்துக்கு செல்லும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- சேலத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் சிவலிங்கம்
5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, கோவையில் 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளில் கோவை மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 6,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பின்னா் கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு செல்கிறாா். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு காலை 11.50 மணிக்கு வெலிங்டனில் இருந்து புறப்பட்டு பகல் 12.25 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு திரும்புகிறாா்.
பின்னா் அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.