முகப்பு
தமிழ்நாடு

இலக்கியத் திருவிழாக்களும் மாவட்டந்தோறும் நடைபெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இலக்கியத் திருவிழாக்களும் மாவட்டந்தோறும் நடைபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

இலக்கியத் திருவிழாக்களும் மாவட்டந்தோறும் நடைபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சென்னை இலக்கியத் திருவிழா 2023யை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, 
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
- என்று புரட்சிக்கவிஞரால் போற்றப்பட்ட நம் தாய்மொழியான தமிழுக்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம்! அதுவும் தமிழ்நாட்டினுடைய தலைமகனாக விளங்கியஅண்ணாவின் பெயரில் அமைந்துள்ள இந்த நூற்றாண்டு கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது என்பது மிகமிக பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது. இதைவிட வேறு ஒரு பொருத்தமான இடம் நிச்சயமாக அமைய முடியாது.
தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நாடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் பங்குபெறக் கூடிய வகையில் இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். மாநிலத்தின் முதல்வர் என்ற பெருமையால் மட்டுமல்ல, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழன் என்ற அந்த உரிமையால் இந்த விழாவில் பங்கெடுப்பதிலே நான் பெருமைப்படுகிறேன்.
தி.மு.க.-வின் ஆட்சிக்காலம் என்பது எப்போதும் தமிழாட்சி காலம் தான். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது
தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்து வருகிறது.
 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட தமிழருடைய நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது!
 நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது நம்முடைய தலைவர் கருணாநிதி என்பதை நாடு மறந்துவிட முடியாது.
 மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியது!
 ஸ்ரீ, ஸ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு, திருமதி என்ற சொல்லை சட்டபூர்வமாக ஆக்கியது!
 தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!
 திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது!
 தமிழ் வாழ்க என எழுத வைத்தது!
 சிலம்பின் பெருமையை எடுத்துக் காட்டக்கூடிய வகையிலே பூம்புகார் கோட்டம் அமைத்தது!
 தமிழில் வழிபடக்கூடிய உரிமையை பெற்றுத் தந்தது!
 ஆட்சிமொழியாய் தமிழை முழுமையாக்கியது!
 தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டது!
 தமிழை கணினி மொழி ஆக்கியது!
 தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம்!
 உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது!
 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது!
 திராவிடப் பல்கலைக் கழகத்திற்கு நிதி வழங்கியது!
 தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999 இல் நடத்தியது!
 அனைத்து விழாக்களிலும் நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும் என்று உத்தரவிட்டது !
 சென்னை கடற்கரையில் அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு.போப், வ.உ.சி., பாரதியார், பாரதிதாசன் சிலைகளை அமைத்தது !
 தொல்காப்பியப் பூங்கா அமைத்ததும் திமுக ஆட்சிக்காலத்திலே தான்!
 பொங்கல் திருநாளுக்கு மறுநாளை திருவள்ளுவர் நாளாக அரசு விடுமுறையுடன் அறிவித்தது திமுக!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தான் திமுக ஆட்சியை தமிழாட்சி என்று நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அந்த வரிசையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை முத்தமிழ் வளர்ச்சிக்காகச் நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
வரலாற்றை படித்தவர்களால் தான் வரலாற்றைப் படைக்க முடியும். இலக்கியம் படித்தால் தான் நாம் வாழும் சமுதாயத்தை உணர முடியும்.
இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும்.
புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய திருவிழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும். இது
கூடி கலையும் கூட்டம் அல்ல,
கூடிப் படைக்கும் கூட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் இலக்கிய விழா சிறப்பிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →