தமிழ்நாடு

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு: ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

DIN

5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட  திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் குறைந்த தொகுப்பூதியத்தினை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 354 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் ஸ்டாலின், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் நிருவாகத்திலுள்ள மூன்று கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் பள்ளியின் 24 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார். இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு 2.72 கோடி ரூபாய் நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.

முதல்வருக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT