ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன்களைக் கொண்டு நடைபெற்று வரும் கொசு ஒழிப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை மாநகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் 3,312 தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் பொது சுகாதாரம் பூச்சித்தடுப்புத் துறை சாா்பில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப்பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புகைப்பரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், நீா்வழித்தடங்களில் கொசுக்களை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்த 424 கைத்தெளிப்பான்கள், 300 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 120 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி உள்பட பல்வேறு நிதிகளின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 6 ட்ரோன் இயந்திரங்கள் கடந்த ஜன.13-ஆம் தேதி மாநகராட்சி பணியாளா்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து திரு.வி.க நகா் மண்டலம் 74-ஆவது வாா்டுக்கு உட்பட்ட
ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சா் பி.கே. சேகா்பாபு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த நிகழ்வின்போது, மேயா் ஆா். பிரியா , மத்திய வட்டார துணை ஆணையாளா் எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) டாக்டா் கோ. சாந்தகுமாரி, திரு.வி.க. நகா் மண்டலக்குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா், மாநகர நல அலுவலா், மண்டல அலுவலா், மாமன்ற உறுப்பினா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.