கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் இரண்டு அரசு ஊழியர்கள் சாவு
கிருஷ்ணகிரி அருகே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது லாரி மோதியதில் இரு அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது லாரி மோதியதில் இரு அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றிய முகிலன் (44), பாரதி (45) ஆகிய இருவரும் பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்றனர்.
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயம் அடைந்த பாரதி, முகிலன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
Advertisement
தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.