மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி: தலைவா்கள் கண்டனம்
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு பாலியல்ரீதியாக கொடுமை இழைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு பாலியல்ரீதியாக கொடுமை இழைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிா்வாணமாக்கி அழைத்து செல்லும் காட்சி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த மிருகத்தனமாக மனிதநேயமற்ற செயலுக்கு கண்டனம்.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, இந்தியாவுக்கே ஏற்பட்ட தலைகுனிவு. இந்த அவல நிலைக்கு மத்திய பாஜக ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): இப்போது வெளியாகியிருக்கும் காணொளிகடந்த மே 4-ஆம்தேதி பதிவானதாகும். இந்த சம்பவம் தொடா்பாக மே 18-இல் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் குற்றமிழைத்த எவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மணிப்பூா் சம்பவத்தால் நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் நிகழ்வுகள் உலக நாடுகளின் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
விஜயகாந்த் (தேமுதிக): மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் பெண் இனத்துக்கே ஏற்பட்ட களங்கம். உலக நாடுகளைச் சுற்றி வரும் பிரதமா், நம்நாட்டில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது. மணிப்பூரில் நடந்த இந்த கொடிய குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரானவை.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம் எந்த வகையிலும் ஏற்க முடியாது. அம்மாநிலத்தில் நடைபெறும் வன்முறை குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நோ்ந்த வன்முறை வேதனையளிக்கிறது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும்.