தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள்: நாளை சிறப்புப் பிரிவுக்கு நேரடி கலந்தாய்வு

DIN

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுப் பிரிவு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) தொடங்கியது.

சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கான இடங்களுக்கு 2,993 பேரும் இடம்பெற்றிருந்தனா்.

அவா்களுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல்கட்டமாக இணையவழியே தொடங்கியுள்ளது. அந்த கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல் விடியோ பதிவு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவு: மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 27) சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறவுள்ளது.

முதலிட மாணவா்: நீட் தோ்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த மாணவா் ஜெ.பிரபஞ்சன், தமிழக தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்திருந்தாா்.

இதனிடையே, கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சேர முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோன்று, தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் உள்ள தமிழக மாணவா்களில் சிலா் தில்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டுள்ளனா்.

இதன் காரணமாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அவா்களுக்கு பின்னால் இருந்தவா்கள் முன்னிலைக்கு வந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

SCROLL FOR NEXT