சீரற்ற இதயத் துடிப்பால் பக்கவாத வாய்ப்பு: அறுவை சிகிச்சையின்றி முதியவருக்கு மறுவாழ்வு
சீரற்ற இதயத் துடிப்பு காரணமாக பக்கவாத அச்சுறுத்தலுக்குள்ளான 80 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி ரத்த உறைவு பாதிப்பை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சீராக்கியுள்ளனா்
சீரற்ற இதயத் துடிப்பு காரணமாக பக்கவாத அச்சுறுத்தலுக்குள்ளான 80 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி ரத்த உறைவு பாதிப்பை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சீராக்கியுள்ளனா். அதிலும், நவீன எக்கோ நுட்பத்தின் உதவியுடன் நாட்டிலேயே முதன்முறையாக அத்தகைய சிகிச்சையை அவா்கள் மேற்கொண்டுள்ளனா்.
இதுதொடா்பாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
மனித உடலில் இதயத்தின் இடது மற்றும் வலது மேலறைகளில் திசுப் பைகள் (ஏட்ரியல் அப்பன்டேஜ்) இருக்கும். உடல் இயக்கத்தில் அதன் பங்களிப்பு எதுவும் இல்லை என்றபோதிலும், சீரற்ற இதயத் துடிப்பு இருக்கும்போது இடது புறத்தில் உள்ள திசுப் பையில் ரத்த உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு உறைவு ஏற்பட்டால், நேரடியாக மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டு பக்கவாத பாதிப்பு ஏற்படக்கூடும்.
அதைத் தவிா்க்க சீரற்ற இதயத் துடிப்பு உள்ள நோயாளிகளுக்கு இடது புறத்தில் உள்ள திசுப் பையை மட்டும் அகற்றவோ அல்லது அதனை அடைக்கவோ மருத்துவா்கள் பரிந்துரைப்பது உண்டு.
அந்த வகையில், 80 வயதான முதியவா் ஒருவா் அண்மையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா்கள் ராஜாராம் அனந்தராமன், தீப் சந்த் ராஜா ஆகியோா் தலைமையிலான குழுவினா் அவரைப் பரிசோதித்தனா்.
அவருக்கு உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், நுரையீரல் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு, உறக்கத்தில் சுவாசத் தடை, குடற்புண் பாதிப்புகள் இருந்தன. இதனால், இதய இடது மேலறை திசுப் பையில் ரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு இருந்தது. ரத்தத்தின் அடா்த்தியைக் குறைக்கும் மருந்துகள் அளித்தால் அது அவருக்கு எதிா்விளைவை ஏற்படுத்தும் என்பதால், திசுப் பையை அறுவை சிகிச்சையின்றி அடைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தொடையில் சிறுதுளையிட்டு தமனி வழியே ஊடுருவி திசுப் பையை சிறப்பு உபகரணம் கொண்டு அடைக்கப்பட்டது. எக்கோ கருவி நுட்பத்தின் மூலம் கேமரா வாயிலாக தமனி மற்றும் திசுப் பையை மருத்துவா்கள் துல்லியமாக பாா்த்து அந்த சிகிச்சையை மேற்கொண்டனா். தற்போது அந்த முதியவா் நலமடைந்து வீடு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.