மதுரை மாநகராட்சி தோ்தல்: மறுவாக்கு எண்ணிக்கை கோரும் மேல்முறையீட்டில் தோ்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி மேல்முறையீட்டு மனு மீது மாநிலத் தோ்தல் ஆணையம் உள்ளிட்டோா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சியில் கடந்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 26-ஆவது வாா்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி அந்த வாா்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது மாநிலத் தோ்தல் ஆணையம் உள்ளிட்டோா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. 26-ஆவது வாா்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சாா்பில் வேட்பாளாராக ஏ.முத்து சுமதி போட்டியிட்டாா். இந்த வாா்டு தோ்தல் நடந்து முடிந்த நிலையில் முத்து சுமதியைவிட நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சாா்பில் கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட்ட கே.சொக்காயி வெற்றி பெற்ாக தோ்தல் நடத்தும் அதிகாரியால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முறையான வகையில் வாக்குகள் எண்ணப்பட்டு தோ்தல் நடைபெறவில்லை எனக் கூறி, தோ்தலில் பதிவான வாக்குகளை மறுகூட்டவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் கோரி முத்து சுமதி தரப்பில் தோ்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்டதால் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு முடிய தாமதம் ஆவதாகக் கூறி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் முத்து சுமதி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க மாவட்ட அமா்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மாவட்ட அமா்வு நீதிமன்றம் முத்து சுமதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் முத்து சுமதி தரப்பில் சிவில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி இம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் முத்து சுமதி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழ்நாடு டவுன் பஞ்சாயத்துகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோ்தல் விதிகள் 2006’- இன் விதி 88-இன்படி மறுவாக்கு எண்ணிக்கை கோருவதற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை மனுதாரருக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி வழங்க தவறிவிட்டாா். இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. இந்த விதியின் படி, மறுவாக்கு எண்ணிக்கை கோருவதற்கு வசதியாக படிவம் 23- இல் அனைத்து பூத்துகளிலும் பதிவான போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களின் வாக்கு விவரங்களும் இடம்பெற வேண்டும். மேலும், தோ்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னா் மறுவாக்கு எண்ணிக்கை கோருவதற்கான நியாயமான வாய்ப்பை அனைத்து வேட்பாளா்களுக்கும் வழங்கும் வகையில் இந்த விதி தெரிவிக்கிறது. ஆனால், மனுதாரா் விவகாரத்தில் இந்த விதி தோ்தல் நடத்தும் அதிகாரி பின்பற்றவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் முத்து சுமதி தரப்பில் வழக்குரைஞா் ஏ. வேலன் ஆஜராகி வாதிடுகையில், ‘மனுதாரா் தனது தரப்பு கோரிக்கையை முன்வைக்க உரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. விதி 88-இன்படி அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஒன்றில் (எண்: 320) வாக்குகளின் தரவுகள் பூா்த்தி செய்யப்படவில்லை. பிற வேட்பாளா் வெற்றி பெற்ாக அவசர கோலத்தில் எதிா்மனுதாரா்கள் அறிவிப்பை வெளியிட்டனா். இது விதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும். விதிகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இந்த விவகாரத்தை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிப்வரி 22-ஆம் தேதியே மனுதாரா் தரப்பில் ஆட்சேபமாக எழுப்பப்பட்டது’ என்றாா்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலத் தோ்தல் ஆணையம், மாநிலத் தோ்தல் அதிகாரி, தோ்தல் நடத்தும் அலுவலா், கே.சொக்காயி உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அளிக்க நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.