முகப்பு
இந்தியா

மேற்கு வங்க வெற்றியைத் தீர்மானிக்கும் 54 தொகுதிகள்! தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவு யாருக்கு?

மேற்கு வங்கத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் உள்ள தொகுதிகள் பற்றி...

Updated On : 28 மார்ச், 2026 at 10:05 AM
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் மமதா பானர்ஜி. (கோப்புப் படம்) - X/ TMC
பகிர்:

மேற்கு வங்கத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் உள்ள 54 தொகுதிகள் அந்த மாநிலத்தில் வெற்றியைத் தீர்மானிப்பதாக உள்ளன.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரி முன்னணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் வெற்றியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் வசிக்கும் வடக்கு வங்காளத்தில் உள்ள 54 தொகுதிகள் அந்த மாநில வெற்றியைத் தீர்மானிப்பதாக உள்ளன.

வடக்கு வங்காளத்தில் டார்ஜீலிங், கலிம்போங், ஜல்பைகுரி, அலிபுர்துவார், கூச் பெஹார், வடக்கு தினாஜ்பூர், தெற்கு தினாஜ்பூர், மால்டா ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள மால், நாக்ரகட்டா, கல்சினி, மதரிகாட், அலிபுர்துவார் உள்ளிட்ட 54 தொகுதிகள் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் இந்த தொகுதிகளில் தேயிலை சாகுபடி பிரபலமாக உள்ளது. அதுபோல தேர்தலிலும் இந்த தொகுதிகள் பிரபலமாகவே உள்ளன. இங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே கூலி பெறுகிறார்கள். தங்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ் வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதலில் இடதுசாரி, காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதிகள் பின்னர் திரிணமூல் காங்கிரஸிடம் சென்றது.

2011 தேர்தலில் இங்குள்ள 54 தொகுதிகளில் திரிணமூல் 28 தொகுதிகளிலும் 2016ல் 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

பின்னர் 2019 மக்களவைத் தேர்தலில் இங்குள்ள மக்களவைத் தொகுதிகள் பாஜக வசமானது. 8 எம்.பி. தொகுதிகளில் 7 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது.

அடுத்து நடைபெற்ற 2021 பேரவைத் தேர்தலில் திரிணமூல் 24 தொகுதிகளிலும் பாஜக 30 தொகுதிகளிலும் வென்றது. திரிண மூலைவிட பாஜக அதிகமாக வென்றது வரலாற்று வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பின்னர் 2024 மக்களவைத் தேர்தலிலும் 8 எம்.பி. தொகுதிகளில் 6 தொகுதிகளை பாஜக பிடித்தது. இப்போது திரிணமூல் கட்சியைவிட பாஜகவே இந்த இடங்களில் வலுவாக இருக்கிறது என்கின்றன தகவல்கள்.

54 தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் பாஜக இந்த பகுதிகளில் உள்ள மக்களிடையே நேரடி பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் இது இருக்கிறது. ஆதிவாசி, கோர்கா பழங்குடியினர் இங்கு வசிக்கிறார்கள். 'திரிணமூல் காங்கிரஸ் இந்த பகுதிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது' என பாஜக தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

அதேநேரத்தில் திரிணமூல் காங்கிரஸும் இந்த தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது. மேற்குவங்கத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் வடக்கு வங்காளத் தொகுதிகள் என்பதால் இந்த முறை பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் முதல்வர் மமதா பானர்ஜியே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில் பழங்குடியினருக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசில் முக்கியத்துவம் வழங்கப்படாதது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்காதது உள்ளிட்டவை மம்தாவுக்கு எதிராக உள்ளன.

எனினும் ஒவ்வொரு முறையும் இந்த 54 தொகுதிகள் கணிக்க முடியாததாகவே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜல்பைகுரி உள்ளிட்ட சில தொகுதிகளில் நகர, கிராமப்புற வாக்காளர்கள் என கலவையாகவே உள்ளனர்.

வேலைவாய்ப்பு, தொழிலாளர்களின் ஊதியப் பிரச்னை, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை இந்த தொகுதிகளின் முக்கிய பிரச்னையாக உள்ளன.

ராஜ்பன்ஷி, காம்தாபுரி சமூகத்தினரின் வாக்கும் இங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இவர்கள் 12 முதல் 15 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தேயிலைத் தோட்ட வேலைவாய்ப்புப் பதிவுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று இந்த முறை தேர்தல் ஆணையம் கூறியுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். இதனால் இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் வரும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலாக வரும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதாவே 4 ஆவது முறையாக ஆட்சியமைப்பார் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த 54 தொகுதிகள் மேற்கு வங்க தேர்தல் முடிவுகளில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

54 seats: Tea-growing North Bengal at heart of brewing poll battle

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.