காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம்!
காரைக்காலில் இருந்து பாய்மரப் படகில் மாணவ, மாணவியர் புதுச்சேரி திரும்பும் சாகசப் பயணத்தை புதன்கிழமை மேற்கொண்டனர்.
காரைக்கால்: காரைக்காலில் இருந்து பாய்மரப் படகில் மாணவ, மாணவியர் புதுச்சேரி திரும்பும் சாகசப் பயணத்தை புதன்கிழமை மேற்கொண்டனர்.
வருகிற 2024 ஆம் ஆண்டு புதுதில்லி குடியரசு நாள் அணிவிகுப்பில் பங்கேற்போரை தேர்ந்தெடுக்கும் வகையில் தேசிய மாணவர் படை சார்பில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக, தமிழ்நாடு தேசிய மாணவர் படைப் பிரிவு, புதுச்சேரி தேசிய மாணவர் படைப் பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கான பாய்மரப் படகில் கடல் சாகப் பயணத்தை புதுச்சேரியில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கினர். முதல்வர் என்.ரங்கசாமி இதனை தொடங்கி வைத்தார்.
Advertisement
இதில், 25 மாணவியர் உள்பட 60 தேசிய மாணவர் படைப் பிரினர் ஈடுபட்டுள்ளனர். 3 பாய் மரப் படகில் மாணவ மாணவியர், பாதுகாப்புக்காக விசைப்படகில் குழுவினர் ஆகியோர் காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்து சேர்ந்தனர். இக்குழுவில் லெப்டிணன்ட் கமாண்டர்கள் கு.கீர்த்தி நிரஞ்சன், ச.லோகேஷ் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
பாய்மரப் படகில் கடல் சாகப் பயணத்தில் தமிழ்நாடு தேசிய மாணவர் படைப் பிரிவு, புதுச்சேரி தேசிய மாணவர் படைப் பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்.
இவர்கள் காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை காலை புதுச்சேரிக்கு புறப்பட்டனர். இவர்களது பயணத்தை புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அமைச்சர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளர் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்குழுவினர் தமது பயணத்தில் சில இடங்களில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு, கடற்கரைத் தூய்மை உள்ளிட்ட பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், புதுச்சேரி - காரைக்கால் இடையே போக்குவரத்தாக 302 கி.மீ. தூரம் பயணம் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் புதன்கிழமை புதுச்சேரிக்கு புறப்பட்ட பயணத்தை புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.