அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி மறுப்பு!
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தற்போதய மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எழுந்த புகாரையடுத்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் மே கடைசி வாரம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று காலை முதல் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சென்னையில் உள்ள செந்தில் பாலாஜி இல்லத்துக்கு சென்ற ஆர்.எஸ்.பாரதிக்கு அவரை சந்திக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
செந்தில் பாலாஜி ஒரு அமைச்சர். அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்ப செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைகளால் ஒரு மனிதரின் புகழை ஒன்றும் செய்ய முடியாது.
மத்திய அரசின் செயல் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகல்ல. தலைமைச் செயலகத்தில் இதற்கு முன்பு சோதனை நடந்தபோது கண்டித்தது திமுகதான் எனத் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.