அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை அமலாக்கத்துறை அதிகாரி போல நினைத்துக்கொண்டு பேசுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மாரடைப்பு காரணமாக சென்னையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜியின் கைது சட்டபூர்வமானது என்றும் அவர் உடல்நிலை சரியில்லாதது போல நடிப்பதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆளுநர் மாளிகையா? ஆர்.எஸ்.எஸ். அலுவலகமா? - தொல். திருமாவளவன் ட்வீட்
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, 'செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் துன்புறுத்தப்பட்டுள்ளார். அவர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவில்லை. விசாரணையின்போது செந்தில் பாலாஜிக்கு தண்ணீர் கூட தரப்படவில்லை. மாரடைப்பு எப்போது, எப்படி வேண்டும் என்றாலும் ஏற்படலாம். இதுகூட தெரியாமல் முதலமைச்சராக இபிஎஸ் எப்படி இருந்தார் எனத் தெரியவில்லை.
உடல்நலம் பாதித்த ஒரு தொண்டரை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் என்ன தவறு இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, 1.5 கோடிக்கு இட்லி சாப்பிட்ட கூட்டம்தான் எடப்பாடி கூட்டம்.
முதல்வர் வைத்த குற்றச்சாட்டுக்கு இபிஎஸ் நேரடியாக பதில் தரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் தன்னை அமலாக்கத்துறை அதிகாரிபோல் நினைத்துக்கொண்டு பேசுகிறார்.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில்தான். பதவிக்காக ஒரு பேச்சும் பதவிக்கு வந்த பின் வேறு பேச்சும் பேசுவது நாங்கள் அல்ல. அமலாக்கத்துறை சோதனைக்கெல்லாம் திமுக அஞ்சவில்லை' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.