தமிழ்நாடு

மகிழ்ச்சியான செய்தி: பெருங்களத்தூர் ரயில்வே கேட் விரைவில் மூடப்படலாம்

DIN


பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சீனிவாசா நகரில் இறங்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படவிருக்கிறது.

இந்த மாத இறுதிக்குள் இந்த ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்குக் குறைந்துவிடும். மேலும், பெருங்களத்தூர் தண்டவாளத்தைக் கடந்து செல்ல உதவும் ரயில்வே கேட்டும் விரைவில் மூடப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டால், பீர்க்கன்கரனை, புதிய பெருங்களத்தூர் பகுதியில் சீனிவாசன் ராகவன் நகரை நோக்கி போக்குவரத்து எந்த தங்கு தடையும் இன்றி செல்ல வழிவகை ஏற்படும். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 400 மீட்டர் மூன்றாவது வழித்தடமாக, ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

இதன் மூலம் சீனிவாச நகரிலிருந்து வரும் வாகனங்கள் நேராக ரயில்வே மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடைந்து தாம்பரம் செல்லலாம். 

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.235 கோடியில் 6 வழித்தடங்களுடன் நீள்வட்ட சாலை உருவாக்கப்பட்டது.

இரண்டு வழித்தடங்களில் வண்டலூர் - தாம்பரம் இடையே கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. எதிர் திசையில் இரண்டு வழித்தடங்களில் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் சீனிவாசா நகர் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படவிருக்கிறது. காந்தி சாலையில் உள்ள தாம்பரம் பைபாஸ் சாலையை காமராஜர் நகர் வரை இணைக்கும் 750 மீ வழித்தடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உள்ளது.

எனவே, ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்பட்டதும் பெருங்களத்தூர் ரயில்வே கேட்டை மூடுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இந்த ரயில்வே கேட் வழியாக வெளியே வரும் வாகனங்களும், ஜிஎஸ்டி சாலையில் சேரும்போதுதான், இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, புதிய ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு, இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு சீரடையும் என்று நம்பப்படுகிறது.

பெருங்களத்தூர் என்றதுமே போக்குவரத்து நெரிசல்தான் நினைவுக்கு வரும் அளவுக்கு கடந்த இருபது ஆண்டுகளாக, அப்பகுதி நெரிசல் மிகுந்த சாலையாகவே மாறியிருந்தது.

சென்னை வேளச்சேரி, பெருங்களத்தூா் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய பாலங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டதால், பெருங்களத்தூர் பகுதியில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது.

கடந்த ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் ரூ.37 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி சென்னை - செங்கல்பட்டு வழித் தட போக்குவரத்துக்காகவும், மற்றொரு பகுதி செங்கல்பட்டு - சென்னை வழித்தட போக்குவரத்துக்காகவும் அமைக்கப்பட்டது.

இந்தப் பாலம் திறக்கப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு - சென்னை மாா்க்கத்தில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT