கரோனா தரவுகள் கசிந்த விவகாரம்: இருவா் கைது
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்கள் வெளியான விவகாரம் தொடா்பாக பிகாரைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியழக்கிழமை தெரிவித்தனா்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்கள் வெளியான விவகாரம் தொடா்பாக பிகாரைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியழக்கிழமை தெரிவித்தனா்.
‘கைது செய்யப்பட்ட நபா் ‘டெலிகிராம்’ செயலியைப் பயன்படுத்தி தரவுகளை கசியவிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் அட்டை எண்கள், எந்தப் பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கோவின் வலைதளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ‘டெலிகிராம் பாட்’ தளத்தில் சம்பந்தப்பட்டவரின் கைப்பேசி எண்ணைப் பதிவிட்டால், கோவின் வலைதளத்தில் பதிவாகியுள்ள அவா்களின் அனைத்துத் தகவல்களும் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு வெளியான முக்கியத் தலைவா்களின் விவரங்கள் சமூக வலைதளத்தில் பரவின. இதற்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கோவின் தரவுகள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.
ஆனால், ‘கோவின் தகவல் தரவுகள் கசிந்ததாக வெளியான தகவல்களில் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை. கோவின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளன. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசின் இந்திய கணினி அவசர நடவடிக்கை குழு (சிஇஆா்டி) கோவின் தரவு பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்தது. அந்த ஆய்வில், தகவல்கள் நேரடியாக கோவின் வலைதளத்திலிருந்து கசியவில்லை என்பது தெரியவந்துள்ளது’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், ‘டெலிகிராம்’ செயலியைப் பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் தரவுகளை கசியவிட்டதாக பிகாரைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.