முதல்வர் குறித்து அவதூறு: பாஜக பெண் பிரமுகருக்கு போலீஸ் காவல்!
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட கோவை பாஜக பெண் பிரமுகருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட கோவை பாஜக பெண் பிரமுகருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் உமா காா்கி (56). பாஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளரான இவா், சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் பிரதமா் மோடி தொடா்பாக ஆதரவு கருத்துகளையும், திமுக, பெரியாா் ஈ.வெ.ரா., மணியம்மை, நடிகா் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினா் தொடா்பான சா்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவிட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து உமா காா்கி தொடா்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாக, கோவை சைபா் கிரைம் போலீஸில் கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளா் ஹரீஷ் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
இதன் பேரில் சைபா் கிரைம் போலீஸாா், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உமா காா்கியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட உமா காா்கி, கோவை 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், உமா கார்கியை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் 2 நாள்கள் கோரிய நிலையில், இன்று மாலை 5 மணிவரை விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் அனுமதி வழங்கியுள்ளது.