குடிநீர், கழிவுநீர் கால்வாய்: தனியார் நிறுவனம் சார்பில் ரூ.2.28 கோடி வழங்கல்!
பொன்னேரி அருகே இடையஞ்சாவடி பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர், கழிவு நீர் வாய்க்கால் அடிப்படை வசதிகள் செய்து தர தனியார் நிறுவனம் சார்பில் ரூ.2.28 கோடி ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்: தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக வர்த்தகக் கிடங்கு அமைக்கப்பட்டு வருவதை முன்னிட்டு சுற்றுப்புறப் பகுதிகளில் குடிநீர், கழிவுநீர், புயல் நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக தனியார் நிறுவன நிர்வாகிகள் ரூ.2.28 கோடிக்கான காசோலையை ஆட்சியர் ஆல்பி ஜான் வரிகீஸிடம் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே இடையஞ்சாவடி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக வர்த்தகக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுற்றுப்புறச் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவும் முன்வந்தது. அதன்பேரில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் இணைப்பு வசதி, கழிவு நீர் வாய்க்கால், புயல் நீர் வடிகால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான மரங்களை நடுதல் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2.28 கோடி வழங்கவும் நிறுவனம் முன்வந்தது.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான வங்கி வரைவோலை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தனியார் நிறுவன நிர்வாகிகள் ரூ.2.28 கோடிக்கான வரைவோலையை நிறுவனத்தின் நிர்வாகிகள் வழங்க ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெற்றுக் கொண்டார். அப்போது, கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செ.ஆ.ரிஷப், தனியார் நிறுவன பொருளாதார மண்டல மேலாளர் ரஞ்சித் ராய், துணைப்பொதுமேலாளர் ரமேஷ் அழகப்பன், தமிழ்நாடு அரசு தொழில் துறை வழிகாட்டி இணை துணைத்தலைவர் ஆர்.பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.