மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்புயர்வு மையத்திற்கான கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்து வருவதை அடுத்து அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஒப்புயர்வு மையம் ரூ.20 கோடியில் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
இதையடுத்து பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஒப்புயர்வு மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் ஒப்புயர்வு மையம் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் அமைக்கப்படுகிறது. இதில் 150 படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இம்மையத்தில் குழந்தைகளுக்கான பல்நோக்கு சிகிச்சை பிரிவும் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீண்குமார், , சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ஆ. வெங்கடேசன் (சோழவந்தான்), மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, துணை மேயர் நாகராஜன், அரசு மருத்துவமனை முதன்மையர் ஏ.ரத்தினவேல் மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.