தமிழகத்தில் மேலும் 4 நாள்கள் மழை பெய்யும்
தமிழகத்தில் மேலும் 4 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்இந்திய பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சனி முதல் செவ்வாய்கிழமை (ஜூன் 24-27)வரை நான்கு நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்
கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகளில் சனி முதல் செவ்வாய் கிழமை வரை (ஜூன் 24-27) மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும்.
இதுபோல வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.