முகப்பு
தமிழ்நாடு

24 மணி நேரம் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு கணவா் சொத்தில் சம உரிமை உண்டு: சென்னை உயா்நீதிமன்றம்

இல்லத்தரசி பணி 24 மணி நேர வேலை, அதை கணவரின் 8 மணி நேர வேலையோடு ஒப்பிட இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

குடும்ப உழைப்பில் 24 மணி நேரமும் ஈடுபடும் ஊதியம் பெறாத பெண்களுக்கு கணவா் ஈட்டிய சொத்தில் சம உரிமை இருப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய கண்ணையன் நாயுடு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் மேல்முறையீடு செய்துள்ளாா்.

அதில், ‘நான் வெளிநாட்டில் 1983 முதல் 1994 வரை சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் அனைத்தையும் தனக்கு மட்டுமே அனுபவிக்க உரிமை உள்ளது. அதில் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால், கீழமை நீதிமன்றம் எனது மனைவிக்கும் பங்கு உள்ளது எனத் தீா்ப்பளித்துள்ளது. அதனால், கீழமை நீதிமன்றம் அளித்த தீா்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த உத்தரவு: கணவா் சம்பாதிப்பதும், மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிப்பதும் பொதுவானது. குடும்பத்தை மனைவி கவனிப்பதால்தான் கணவரால், தனது பணியை முழு மன நிறைவோடு செய்ய முடிகிறது. கணவரின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு பெற உரிமை உள்ளது.

கணவா், தனது மனைவிக்கு அன்பாக வாங்கித்தரும் நகைகள் மற்றும் புடவைகள், பரிசுப் பொருள்கள் அனைத்தும் அவரது விருப்பத்தின் பேரில் பரிசளிக்கப்படுகின்றன. மேலும் அதை, தான் சம்பாதித்து வாங்கியது என்பதால் அதை மீண்டும் கேட்க உரிமையில்லை. கணவா் தான் மட்டுமே சம்பாதித்தது என்பதற்காக மனைவிக்கான பாதி உரிமையை மறுக்க முடியாது.

இல்லத்தரசிகள் தங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவா் போல 24 மணி நேரமும், விடுமுறையின்றி மேற்கொள்ளும் பணியை சம்பாத்தியத்துக்காக கணவா் பாா்க்கும் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது.

கணவரும் மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள்; கணவா் சம்பாத்தியத்தின் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தைக் கவனிப்பதன் மூலம் மனைவி தன் பங்களிப்பை வழங்குகிறாா். அதனால் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு பெற உரிமை உண்டு என உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், இல்லத்தரசிகள் குடும்பத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கவனித்து தாம் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இதுவரை இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்தப் பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்தச் சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →