முகப்பு
தமிழ்நாடு

கல்குவாரி, கிரசர்கள், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் கல்குவாரி, கிரசர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை  திங்கள்கிழமை தொடங்கினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கல்குவாரி, கிரசர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை  திங்கள்கிழமை தொடங்கினர். 

கோரிக்கைககள்: 
2016க்கு முன்னர் உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு உரிமம் புதுப்பித்தலின்போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்கவேண்டும்.

கல்குவாரிக்கு அனுமதியளிக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை  சுரங்க பகுதி  என அறிவித்து அப்பகுதியில் வேறு எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. 

கனிம வள அலுவலகத்தில் உரிமம் கொடுக்கும் முறையை எளிமைப்படுத்திட வேண்டும்.

அரசு புறம்போக்கு நிலத்தை குவாரிக்கு ஏலம் விடும்போது அதற்கு உண்டான ஈ.சி. மற்றும் கனிம திட்ட அறிக்கை வழங்கிட வேண்டும்.

5 ஹெக்டேருக்கு மேல் உள்ள குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்ட பின்னரே உரிமம் வழங்கப்படுகிறது. இதை தொகுப்பாக மாற்றி 25 ஹெக்டேராக அதிகரிக்கவேண்டும்.

கல்குவாரி உரிமத்தை புதுப்பிக்க குறித்த காலத்தில் விண்ணப்பித்தும், அதை புதுப்பிக்க 2 ஆண்டுகாலம் ஆகிறது. இதை மாற்றி விரைவில் உரிமம் புதுப்பித்துக் கொடுக்க சட்டத் திருத்தம் செய்யவேண்டும்.

அம்மிக்கல், ஆட்டாங்கல், குழவிக்கல் உற்பத்தி தொழிலுக்கு கனிம விதியில் மாற்றம் செய்து ஆட்சியரின் அனுமதியுடன் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

அனைத்து வகை குவாரிகளுக்கும் வழங்கப்படிருப்பதைப் போல கல்குவாரிகளுக்கும் 30 ஆண்டுகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கிட பரிதுரைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனும் போர்வையில் குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு கனிமங்களுக்கு மாநில அளவிலான சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்பதால் 2013 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த உரிமம் பெறும் முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரி, கிரசர்கள் மற்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்  திங்கள்கிழமை முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சுப்பிரமணி கூறியதாவது:
எங்களது சங்கத்தின் மாநில நிர்வாக குழுக் கூட்டத்தின் முடிவின்படி, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில்  வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

ஈரோடு மாவட்டத்தில் 16 கல்குவாரிகள், 1,500 லாரிகள் உள்ளன. இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எனவே, எங்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து இத்தொழிலையும், அதை நம்பியுள்ளோரையும் பாதுக்காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →