சென்னை: பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் வாதத்தை கேட்காமல் பொதுக் குழு தீர்மானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையும் படிக்க.. சைபர் குற்றங்களிலும் 'பொன்னான நேரம்' முக்கியம்: மக்களே எச்சரிக்கை
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை கட்சியிலிருந்து நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது.
விசாரணையின்போது, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பேரவைக் கூட்டத்தில்கூட பங்கேற்க முடியாத நிலை உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாகக்கூற எந்த ஆதாரமும் இல்லை. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் நியமனம், கட்சி விதிகளுக்கு புறம்பானது. எனவே, எதிர்கட்சியிடம் விளக்கம் கேட்காமல், பொதுக் குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு, எதிர்மனுதாரரிடம் விளக்கம் கேட்காமல் எப்படி உத்தரவு போட முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முன்னதாக, அதிமுக பொதுக் குழு தொடர்பாக, உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்த வழக்கில், அவருக்கு தோல்வியே கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவா் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தாா். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக் குழு செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.