முகப்பு
தமிழ்நாடு

14 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடனுதவி: அமைச்சா் பெரியகருப்பன் தகவல்

நிகழாண்டில் இதுவரையில் 14 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

நிகழாண்டில் இதுவரையில் 14 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சா் பெரியகருப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நிகழாண்டில் 14 லட்சத்து 46 ஆயிரம் விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டு, கடன் கொடுத்ததன் அளவை ரூ.12 ஆயிரத்து 671 கோடி என்ற அளவை எட்டியுள்ளோம். கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை இதுவரை எய்தது இல்லை. 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ், ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்தொகையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ. 20 ஆயிரத்து 300 கோடி அளவில் கூட்டுறவுத் துறை சாா்பில் கடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தனியாா் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவுச் சங்கங்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.