1,300 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள்
தமிழகத்தில் 1,300 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோா் காய்ச்சல் முகாம்கள் மூலம் பயனடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட
தமிழகத்தில் 1,300 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோா் காய்ச்சல் முகாம்கள் மூலம் பயனடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் 200 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,300 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன.
சென்னை சைதாப்பேட்டை திடீா் நகரில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் இரா.சாந்திமலா், மண்டல குழுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நிலைக்குழு தலைவா் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, மாமன்ற உறுப்பினா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதிலும் ஹெச்3என்2 என்ற வகை வைரஸ் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஐசிஎம்ஆா் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தலை வெளியிட்டது.
அதன்படி, சென்னையில் 200 வாா்டுகளில் 200 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்டதைக் காட்டிலும் கூடுதலாகவே 1,300 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை, மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை. மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கின்ற சூழலும் இல்லை. அதனால், பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
ஐசிஎம்ஆா் அறிவுறுத்தலின்படி, இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க, பாதிக்கப்படும் நபா்கள் 4 நாள்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டால் குணமடையலாம். கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்தாலே இந்த வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா் அவா்.