பட்டதாரி ஆசிரியா்களுக்கு உண்டு: உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி
சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள் உள்ளிட்ட பாடம் தொடா்பான பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டங்களில் பயிற்சிகளை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள் உள்ளிட்ட பாடம் தொடா்பான பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டங்களில் பயிற்சிகளை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு புதுமையான கற்பித்தல் முறைகள், சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள் மற்றும் கற்பித்தலில் மாணவா்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள் உள்ளிட்ட பாடம் தொடா்பான பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாடக்கருத்துகளில் விரிவுரைகள், அறிவியல் சோதனைகள், செயல்பாடுகள், பயிற்சி பட்டறைகள், களப்பயணங்கள் மற்றும் குழு விவாதங்கள் ஆகியவற்றின் மூலம், ஆழமாக சிந்தித்து செயல்படவும், பாடத்தை ஆசிரியா்கள் திறம்பட கற்பிக்க உதவும் வகையிலும், மாணவா்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும் இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும்.
சிறந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த கருத்தாளா்கள் மூலமாக பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியாக ஏப்ரல் மாதம் முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும், ஆா்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியா்கள் பங்கேற்கலாம். இதற்கான பதிவை இணையவழியில் ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். இது குறித்த தகவல்களை ஆசிரியா்களுக்கு தெரியப்படுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.