காா் வெடிப்பு வழக்கில் கைதானவரின் மருத்துவ ஆவணங்களை சமா்ப்பிக்கசிறைத் துறைக்கு உத்தரவு
கோவை காா் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என புழல் சிறை அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை காா் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என புழல் சிறை அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த காா் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை காவலுக்கு எடுத்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணையின்போது துன்புறுத்தியதாகவும், அதனால், காயமடைந்துள்ள அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரின் தந்தை முகமது யூசுப் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், அசாருதீனை தலைகீழாகத் தொங்கவிட்டு என்ஐஏ அதிகாரிகள் தாக்கியதாகவும் அதனால், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். மேலும், அசாருதீனின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என என்ஐஏ அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.