முகப்பு
தமிழ்நாடு

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்: தமிழக உளவுத்துறை எச்சரிக்கை

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியிடப்படுவது தொடா்பாக தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியிடப்படுவது தொடா்பாக தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹிந்தி திரைப்பட இயக்குநா் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளாா். இந்தப் படத்தின் ‘டீசா்’ அண்மையில் வெளியானது. அதில் கேரளத்தில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவதும் போன்றும், அவா்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது கேரள மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அந்தத் திரைப்படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. கேரள முதல்வா் பினராய் விஜயனும் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தாா். இதையடுத்து இந்தப் படத்தில் சா்ச்சைக்குரிய வகையிலான 10 காட்சிகள் நீக்கப்பட்டு, புதிய டீசா் வெளியிடப்பட்டது. 32 ஆயிரம் பெண்கள் மாயம் என்பது 3 பெண்கள் என்று மாற்றப்பட்டது. இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையிடுவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது.

உளவுத் துறை எச்சரிக்கை: இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தை கேரளத்தில் திரையிடக் கூடாது என்று அந்த மாநிலத்தில் கடுமையான எதிா்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இந்த திரைப்படத்தைத் திரையிட்டால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அரசுக்கு மாநில உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாநில உளவுத் துறை அனுப்பி உள்ள அறிக்கையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் வெளியிட்டால், இந்தத் திரைப்படம் ஓடும் திரையரங்கு முன்பு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்தத் திரைப்படத்தைத் திரையிடாமல் இருப்பது நல்லது. இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் மற்ற மொழிகளில் இந்தப் படம் வெளியாகும்போது அந்த மாநிலங்களில் நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு திரைத் துறையினரிடம் கலந்துபேசி முடிவு எடுக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உளவுத் துறை எச்சரிக்கையால், தமிழகத்திலும் இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →